Thamizh poems on Sri PeriyavaaL

பெரியவாள்மேல் புலவர்கள் இயற்றிய தமிழ்ப் பாடல்கள்
001

காஞ்சி மாமுனிவர்
(இயற்றியவர்: புதுவயல் செல்லப்பன்)

காஞ்சி மாமுனிவர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பூமலர்ந்த  தெனவிளங்கும் வதனம்! எங்கும்
...புதியஒளி பாய்ச்சுகிற நயனம்! தெய்வ
நாமமதை ஜெபிக்கின்ற திருவாய்!- வைய
...நலம்நாடிக் கேட்டிருக்கும் செவிகள்! யோக
நேமமதற் குதவுகிற நாசி!- மிக்க
...நேர்த்தியுடன் நீறொளிரும் மேனி! – மக்கள்
சேமமுற ஆசிதரும் கைகள்!- காணும்
...சிறுமைகளைத் தேய்ப்பதற்கு நடக்கும் கால்கள்! (1)

ஆன்மிகத்தைப் பரப்புகின்ற சிந்தை, மண்ணில்
...அறப்பயிரை வளர்க்கின்ற உழைப்பு- வாழ்வில்
கூன்விழுந்தார் தமைநிமிர்த்தும் கொள்கை- சின்னக்
...குழந்தையென நகைஉதிர்க்கும் மென்மை, பொல்லா
‘நான்’ வந்து நடம்புரியாப் பண்பு, கங்கை
...நதியாகப் பெருகிவரும் அன்பு, சொல்லில்
தேன்சிந்தி இனிமைதரும் மாண்பு, – நம்மைத்
...தெய்வத்தின் சந்நிதியில் சேர்க்கும் நோன்பு (2)

போற்றுகிற நான்மறையின் ஆழம்! முந்தைப்
...புராணங்கள் பதினெட்டின் நோக்கம், மிக்க
ஏற்றமுள்ள உபநிடத விளக்கம், காக்கும்
...இறையவனே வந்துரைத்த கீதை – கல்வி
ஊற்றறெனவே உள்ளதமிழ் நூல்கள் – மேலோர்
...உவந்தளித்த தீம்பனுவல் அனைத்தும் கூடி
மாற்றறியாய்த் தனிஉருவாய்த் திகழ்ந்தார் காஞ்சி
...மாமுனிவர் எனச்சொன்னால் மறுப்பார் உண்டோ? (3)

விடிந்தொளிரும் செவ்வானக் கதிரும், உள்ள
...வித்தையெலாம் ஊறிவரும் சுனையும், அன்பு
நடந்தபெரு நதியான மனமும், யார்க்கும்
...நன்மைதரும் பேரருளின் திறனும், தூய்மை
படிந்தபல செய்கைகளின் பயனும், இந்தப்
...பாரனைத்தும் உயர்த்துகிற தவமும், அந்த
ஒடிந்துவிழும் உருவத்தில் எப்ப டித்தான்
...உள்ளடக்கம் கொண்டனவோ? தெரிய வில்லை! (4)

காலடியே காஞ்சிக்கு வந்து தூய
...கடவுள்நெறி தனையுலகிற் கோதி னாற்போல்,
சீலமிகும் ஆதிசங் கரரே மீண்டும்
...தெரி்சனத்தைக் கச்சியிலே நல்கி னாற்போல்
ஓலமிடும் உயிர்க்கெல்லாம் அன்பு காட்டி
...உள்ளத்தின் துயர்நீக்கி அமைதி சேர்த்து
ஞாலத்தின் புகழ்கொண்ட பரம வள்ளல்
...நாம்கண்ட பரமேட்டி சுவாமி தானே! (5)

எப்பெயரும் இல்லாத நம்ம தத்தை
...இந்துமதம் எனச்சொல்லி உலக ழைக்கும்!
கப்புகிற துன்பத்தில் ஒருவன் வாடக்
...காணுகையில் வருந்துபவன் இந்து வென்னும்!
எப்படியோ- அன்பொன்றே குறிக்கோ ளாக
...இந்துமதம் கொண்டிருந்த தென்றால் உண்மை!
இப்புவியில் அன்புசொலும் அம்ம தத்தை
...இரவுபகல் காத்தவரும் அவரே அன்றோ? (6)

மண்ணுலகில் கிறித்துமதம் சார்ந்தி ருக்கும்
...மனிதர்க்குக் காஞ்சிமுனி ஏசு வாவார்!
உண்மையில் இஸ்லாத்தைத் தழுவு வோர்க்கோ
...உத்தமராம் நபிகள்நா யகமே யாவார்!
கண்ணெதிரே காட்சிதரும் புத்த ரென்று
...கனிந்துருகிப் பௌத்தரெலாம் வணங்கி நிற்பார்!
அண்ணலவர் நல்லமகா வீரர் என்றே
...அன்புடனே ஜைனரெலாம் போற்றி செய்வார்! (7)

சீக்கியரின் பார்வையிலே மாந்தர் வாழச்
...சிறந்தநெறி புகன்றகுரு நானக் ஆவார்!
வாக்கினிலும் வாழ்க்கையிலும் வண்ணம் காட்டி
...மாறாத நிம்மதியை மனத்தில் கூட்டி
ஆக்கங்கள் அத்தனையும் அளித்தி ருக்கும்
...அன்னைகா மாட்சியென நம்முன் நிற்பார்!
சூக்குமமாய் நோக்குகையில் விரும்பு கின்ற
...தோற்றத்தில் உள்ளுக்குள் விரிந்தி ருப்பார்! (8)

எங்கெங்கு பார்த்தாலும் மதத்தின் பேரால்
...இடிமுழக்கம் கேட்டுக்கொண் டிருந்த நாளில்
மங்கலங்கள் நிறைந்திருக்கும் தமிழர் நாட்டில்
...மாமுனிவர் இவரிருந்த கார ணத்தால்
பொங்கிவந்த போர்க்கொடுமை சிறிதும் இல்லை!
...பூந்தமிழர் நெஞ்சுகளில் வெறியும் இல்லை!
தொங்கிநின்ற முகமொன்றும் தெரிய வில்லை!
...துயரென்ற பெருநெருப்பும் எரிய வில்லை! (9)

விலைதந்து வரன்வாங்கும் அவலம் மேலும்
...வேண்டாமென் றெடுத்துரைத்து நாட்டில் பெண்கள்
குலம்வாழ வகைசெய்த சான்றோர் காமக்
...கோட்டத்தில் வீற்றிருந்த குருவே அன்றோ?
கலைகளுடன் ஆகமங்கள் மறைகள் முற்றும்
...காப்பாற்றப் பெறவேண்டும் என்பதொன்றைத்
தலையாய பணியாகக் கொண்டு முன்னம்
...‘சதஸ்’ அமைத்த பெருமையினை என்ன சொல்ல? (10)

பிடியரிசித் திட்டத்தைக் கொண்டு வந்து
...பேரிறையின் திருப்பணியில் பங்கு தந்தார்!
துடித்துழன்ற மனங்களுக்குக் கருணை யோடு
...சொல்லென்னும் சக்திமிகும் மருந்து போட்டார்!
படித்தறியாப் பாமரர்க்கும் புரியு மாறு
...பரமனவன் தத்துவத்தை விளக்கிச் சொன்னார் !
உடுத்தியதோ காவியுடை ! எனினும் இந்த
...உலகத்தின் ஆண்டகையாய் உயர்ந்து நின்றார் ! (11)

சித்துபல விளையாடி மக்கள் நெஞ்சில்
...சிறப்பான இடத்தையவர் பெறவே யில்லை !
நித்தமொரு பொய்சொல்லி விளம்ப ரத்தால்
...நீணிலத்துப் பெரும்புகழைக் கொள்ள வில்லை !
சத்தியத்தின் வழிநடந்து தளர்வில் லாமல்
...தாரணியின் உயர்வுக்குப் பாடு பட்டார் !
அத்தனவன் திருவடியை யாரும் எய்த
...ஆனவழி அற்புதமாய்க் காட்டி நின்றார் ! (12)

தயவென்ற பண்புக்கு வடிவ மாகத்,
...தகைஎன்ற சொல்லுக்கு விளக்க மாக,
உயர்வென்ற நிலைமைக்கோர் உவமை யாக,
...உலாவந்த நம்காஞ்சி முனிவர் இங்கே
உயிர்வாழச் சிறிதவலும் பாலும் உண்டே
...உறுதியுடன் நூறாண்டு வாழ்ந்த சீலர் !
அயராமல் உலகத்தின் நன்மைக் காக
...அரியதவம் செய்திருந்த அருளின் செல்வர்! (13)

மேதினியின் வேந்தரெலாம் போற்றி நிற்க,
...மிகப்பெரிய மாந்தரெலாம் புகழ்ந்து நிற்கச்,
சாதனைகள் படைத்தோரும் தலைவ ணங்கச்,
...சாத்திரங்கள் தேர்ந்தோரும் கைகள் கூப்ப,
நீதிநெறி உணர்ந்தோரும் சென்னி தாழ்த்த
...நிமலனவன் திருப்பணிக்குத் தன்னைத் தந்த
ஆதிகுரு இவரோஎன் றுளத்தில் எண்ணி
...அருந்தவர்கள் தொழுதேத்தும் ஐயன் ஆவார். (14)

இந்நாளில் அந்தமகான் தூல மேனி
...எழில்காட்டி நம்முன்னம் இருக்க வில்லை !
செந்நாவை அசைத்தபடி நேரில் வந்து
...திருவார்த்தை ஏதொன்றும் உரைக்க வில்லை !
முன்னாலே அவருருவம் மனத்தில் உண்டு !
...மொழிந்திட்ட தெய்வத்தின் குரலும் உண்டு !
எந்நாளும் அம்முனிவர் அருளும் உண்டு !
...இனியவழி அவைகாட்டும் ! நம்பி வாழ்வோம். (15)

ஜயஜய சங்கர ஹரஹர சங்கர.